குவாண்டம் என்றொரு புலி
====================================ருத்ரா.இபரமசிவன்
குவாண்டம் இயற்பியல் எங்கும் இருக்கும்.எதிலும் இருக்கும்.நீல்ஸ் போர் ஹெய்ஸன்பர்க ஸ்க்ரோடிங்கர் ஃபெய்ன்மன் பெல் பி.ஏ டிராக் போன்ற உலக விஞ்ஞானிகள் செதுக்கி செதுக்கி இதன் உருவத்தை "பிண்டம் பிடிக்க"முடியுமா?என்று செய்திருக்கும் முயற்சிகளில் எல்லாம் நுண்கணிதம் நுழைந்து பார்த்து அதன் "பல்லை (பல்ஸை)" பிடித்துப்பார்க்க முயன்று இருக்கிறது.
ஆனால் "பொய்மை வாய்மையிடத்த"..என்ற வள்ளுவர் குறள் மட்டுமே குவாண்டம் கோட்பாட்டை சரியாக கணித்திருக்கிறது."வாய்மையின் அர்த்தமே பொய்மை தான்"என்று நான் சொன்னால் உங்களுக்கு எப்படியிருக்கும்?ஆம்.இப்படியொரு மயக்கத்தை ஏற்படுத்திய விஞ்ஞான கோட்பாடு எது என்றால் அது "குவாண்டம் கோட்பாடு" தான்.
"இருக்கும் ஆனால் இருக்காது " என்ற காமெடி பீஸ் தான் இக்கோட்பாடு.துகள் (பார்டிகிள்) இருப்பிடம் (பொசிஷன்)எனும் புள்ளியிலிருந்து அதன் நகர்ச்சி அல்லது உந்தம் (மொமென்டம்) நிகழ்ந்து முடிந்த நிலையை அளவு படுத்துவதே குவாண்டம் ஆகும்.
அண்டம் என்பது எல்லையற்ற பேராற்றல் அடர்த்தியான துகள் பற்றியது.அங்கே பில்லியன் பில்லியன்..ஒளியாண்டுகள் கூட ஏதோ கொசுக்களின் பரிமாணம் தான்.20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரைக்கும் விஞ்ஞானிகள் இந்த பெரும் பரிமாணங்களில் (மேக்ரோ டைமன்ஷன்ஸ்)மட்டுமே தங்கள் இயற்பியல் சூத்திரங்கள் கொண்டு வேலி முடைந்து கொண்டிருந்தனர்.உலகப்புகழ் பெற்ற ஐன்ஸ்ட்டீனின் பொதுச்சார்பு (ஜெனரல் ரிலேடிவிடி) எல்லாவற்றையும் மறைத்த நிழலாய் இருந்தது.ஆனால் 1900ல் மேக்ஸிம் ப்ளாங்க் ஒரு அடிப்படையான மிக மிக நுண்ணிய துகள் அல்லது ஆற்றல் துளி என்னவாக இருக்கும் என்ற கணக்கீட்டைத்துவக்கினார்.அதற்கும் ஐன்ஸ்ட்டின் கண்டுபிடித்த "ஒளி மின் இழைவு கோட்பாடு"(ஃபோட்டொ எலக்ட்ரிக் எஃப்ஃபெக்ட்) தான் பாதை போட்டது.அதன் பிறகு விஞ்ஞானிகளின் குறி இந்த "நுண்ணிய பரிமாணம்"நோக்கி (மைக்ரோடைமன்ஷன்ஸ்) தாவியது.1913ல் நீல்ஸ் போர் குவாண்டம் இயக்கவியலை (குவாண்டம் மெக்கானிக்ஸ்) அறிவித்தார்.
தமிழில் புலி என்பது வேங்கை என்று சொல்லப்படும்.சங்கத்தமிழில்
வேங்கை மரத்தின் வரிகள் போன்றே புலியும் இருப்பதால் அதுவும் வேங்கை எனப்படும்.இங்கு குவாண்டம் தியரி பொசிஷன் (இருப்பிடம்)
மற்றும் "உந்துவிசை" (மொமென்டம்)இரண்டயும் கட்டிப்போட நினைக்கிறது.ஆனால் ஹெய்ஸன்பர்க உறுதியில்லா கோட்பாட்டின் படி (அன்செர்டன்டி பிரின்சிபிள்) இந்த இரு மதிப்புகளையும் ஒரு சேர ஒரே புள்ளியில் காண இயலாது.வேங்கைக்கு மரம் தெரியாது.அது வேங்கையாகவே தெரியும்.இப்படி ஒரு நிச்சயமற்ற காட்சிக் குழப்பத்தாலே தான் குவாண்டம் கூட ஒரு புலியானது.அது நாம்
கை காட்டி நிற்பதற்குள் பாய்ந்து மின்னலாய் மறைந்து விடும்.குவாண்டமும் அப்படித்தான்.